செவ்வாய், 15 செப்டம்பர், 2009

பன்றிக் காய்ச்சல் நோய்க்கு இந்திய மருத்துவமுறைகளின் கீழ் தடுப்பு மருந்துகள்-மத்திய சுகாதார செயலாளர்களிடம்-நலம் கூட்டமைப்பு மருத்துவர்கள் மனு.

புதுடில்லி, செப். 15- பன்றிக் காய்ச்சல் நோய்க்கு இந்திய மருத்தவமுறைகளின் கீழ் போதுமான அளவிற்குத் தடுப்பு மருந்துகள் உள்ளதாக, நலம் கூட்டமைப்பு மருத்துவர்கள், மத்திய சுகாதார செயலாளரிடம் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் இந்திய மருத்துவமுறைகளின் கீழ் பயிற்சிபெற்று மருத்துவ சேவை செய்து வரும் சுமார் நான்காயிரம் மருத்துவர்கள் நலம் கூட்டமைப்பு என்னும் அமைப்பின் கீழ் இயங்கி வருகின்றனர். இதன் முதன்மை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் நா. சண்முகநாதன், பொதுச் செயலாளர் டாக்டர் எம். கதிர்வேல், தலைமையிட செயலாளர் டாக்டர் துரை. முத்துராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர் டாக்டர் சாமினாதன் ஆகியோர் திங்களன்று மத்திய சுகாதார செயலாளரைச் சந்தித்தனர். ஹோமியோபதி மருத்துவமுறையின் கீழான அர்சனிகம் ஆல்பம்-30 என்னும் மருந்தை பன்றிக் காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்திருப்பதற்கு நன்றி தெரிவித்தனர். மேலும் இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகிய முறைகளிலும் போதுமான அளவிற்கு மருந்துகள் இருக்கின்றன என்று கூறி அவற்றையும் பரிந்துரைத்திட ஆவன நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு செயலாளரிடம் கோரினர். மேலும் இவற்றை மத்திய அரசு ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் போதிய அளவிற்கு விளம்பரங்கள் செய்து பிரபல்யப்படுத்திட வேண்டும் என்றும் அவர்கள் மத்திய சுகாதார செயலாளரிடம் கேட்டுக் கொண்டனர். இத்தகவல்களைப் பின்னர் அவர்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்தனர்.

தகவல்: ச. வீரமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக