வெள்ளி, 11 செப்டம்பர், 2009

பன்றிக் காய்ச்சலும் ஹோமியோபதி மருத்துவமும்

டாக்டர் ச. அன்பழகன்
இயக்குனர், தஞ்சை நலம் மருத்துவமனை

இன்று நாளிதழ்களையும், ஊடகங்களையும் ஆக்கிரமித்துள்ள முக்கியச் செய்தி “பன்றிக் காய்ச்சல்”. மக்கள் பீதி அடைய வேண்டியதில்லை என அரசு தொடர்ந்து அறிவுறுத்தினாலும் பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் பீதியும் பிற பகுதிகளில் ஒரு அச்ச உணர்வும் இருக்கத்தான் செய்கிறது. பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள், காரணம், பாதுகாப்பு முறைகள் பற்றி குறுகிய காலத்தில் நிறைய பேசியாகிவிட்டது. பன்றிக்காய்ச்ச லுக்கான மருத்துவம், மருந்துகள்? இந்தக் கேள்விக்கான ஒரே பதில் டாமிபுளு (Tamiflu) ஆக உள்ளது, Oseltamivir என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துதான் Tamiflu என்கிற வணிகப் பெயரால் அழைக்கப்படுகிறது. இன்று உலகளவில் H1N1 வைரசுக்கான ஒரே மருந்து Tamiflu மட்டும்தான். 10 மாத்திரைகளைக் கொண்ட ஒரு அட்டையின் விலை சுமார் ரூ.1000/- ஒரு நோயாளிக்கு குறைந்தபட்சம் ஒரு அட்டை தேவைப்படும். அரசு இந்த மருந்தினை எவ்வளவு விலைக்கு கொள்முதல் செய்கிறது என்பது நமக்கு தெரியாது. வெளிச்சந்தையில் இதன் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. அரசு மட்டுமே இதனை இருப்பு வைத்துக் கொள்ளமுடியும்.

சரி இத்தனை விலைகொடுத்து வாங்கப்படும் இந்த மருந்து H1N1 வைரசை கட்டுப்படுத்துவதில் அத்தனை திறன் வாய்ந்ததா என்பது பற்றி Lancel மற்றும் British Medical Journal ஆகியவை கேள்வி எழுப்பியுள்ளன. இந்த மருத்துவ இதழ்கள் செய்த ஆய்வுகளின்படி Tamiflu அப்படி ஒன்றும் முழுத்திறன் வாய்ந்த மருந்து அல்ல என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதன் பக்கவிளைவுகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இருந்தும் வேறு வழியில்லை. ஆங்கில மருத்தவத்தில் இதைத் தவிர வேறு மருந்தில்லை. Relenza என்கிற வணிகப் பெயரில் இன்னும் ஒரு மாத்திரை இருந்தாலும், மூலப்பொருள் என்னவோ இரண்டிலும் ஒன்றுதான். பன்றிக்காய்ச்சலுக்கான H1N1 வைரஸ் 1930ல் கண்டுபிடிக்கப்பட்டு பன்றியிடமிருந்து பிரித்தெடுக்கபட்டாலும் அதற்கு இதுவரை தடுப்பூசி (Vaccine) கண்டுபிடிக்கப்படவில்லை. நல்ல வேளை. மற்றுமொரு தடுப்பூசி மரணத்தை நமது மக்கள் சந்திக்க வேண்டியதில்லை!

பன்றிக்காய்ச்சலுக்கு Tamifluவை விட்டால் வேறு வழியில்லையா ஆங்கில மருத்துவத்தை விட்டால் வேறு மருத்துவ முறைகள் எதுவும் பன்றிக்காய்ச்சலைத் தடுக்காதா? குணமாக்காதா?

நிச்சயம் ஹோமியோபதி மருத்துவம் அதனைச் செய்யும். 1918-ல் ஸ்பனிஷ் ஃப்ளு உலகெங்கிலும் 5 கோடி பேரை பலி கொண்டது. அந்த காலக்கட்டத்திலேயே மக்களை மரணத்திலிருந்து மீட்பதில் ஹோமியோபதி மருந்துகள் பெரும் பங்காற்றியுள்ளன. அமெரிக்காவில் 1918-ல் ஆங்கில மருத்துவர்களிடம் ஃப்ளு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றவர்களில் இறப்பு விகிதம் 30 சதவிகிதம். அதே நேரத்தில் ஹோமியோபதி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றவர்களில் இறப்பு விகிதம் 1.05 சதவிகிதம் மட்டுமே. பல ஹோமியோபதி மருத்துவமனைகளில் ஒரு இறப்பு கூட இல்லாமல் 100 சதவீதம் பேரும் குணமாகி வீடு திரும்பியதற்கான சான்றுகள் உள்ளன. இவை அனைத்தையும் அன்று சாதித்தவை இரண்டே ஹோமியோபதி மருந்துகள். அவை ஜெல்சிமியம் மற்றும் பிரையோனியா. இந்த இரண்டு மருந்துகளும் இன்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் அன்றாடப் பயன்பாட்டில் உள்ளவை. இவை மட்டுமல்ல. இன்னும் பல மருந்துகளும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக ஃப்ளு காய்ச்சலை தடுத்தும், காய்ச்சல் வந்தபின் குணமாக்கியும் அற்புதங்களை செய்து வருகின்றன.

ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதை உறுதிசெய்த பிறகுதான் Tamiflu மாத்திரையை அவருக்கு கொடுக்க முடியும். ஆனால் பன்றிக்காய்ச்சலின் தாக்குதலுக்கு ஆளாகாத எவருக்கும் ஹோமியோபதி மருந்துகளை தடுப்பு மருந்துகளாகக் கொடுக்க முடியும். ஒரு நோயாளிக்கு Tamifluவுக்காக செய்யும் செலவில் 100 நோயாளிகளுக்கான ஹோமியோபதி மருந்துகளை வாங்க முடியும். இதனால் பன்றிக்காய்ச்சல் மருத்துவத்தில் அரசின் நிதிச்சுமை 90 சதவீதம் குறையும்.

இதுகுறித்து எத்தனையோ முறை ஹோமியோபதி மருத்துவர்கள் அறிக்கைகள் விடுத்தும் அரசுக்கு கோரிக்கை விடுத்தும் அரசு கண்டுகொள்ளவேயில்லை. இது மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு செய்யும் துரோகம்.

உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளனர். ஹோமியோபதியில் உலகறிந்த சமகால மேதைகள் பலர் இந்தியாவில் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் அவர்களை அழைத்து விவாதிக்க வேண்டும். ஹோமியோபதியிலான பன்றிக்காய்ச்சல் தடுப்பு முகாம்களை நாடு முழுவதும் நடத்தி மக்களை மரணத்திலிருந்து காக்க வேண்டும்.

பின் குறிப்பு :-

பன்றிக்காய்ச்சலுக்கு ஆர்சனிகம் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தை தடுப்பு மருந்தாக அனைவரும் எடுத்துக் கொள்ளலாமென இந்திய ஒன்றியத்தின் நலவாழ்வு அமைச்சகம் சமீபத்தில் பரிந்துரைத்துள்ளது.

1 கருத்து:

illakkia.blogspot.com சொன்னது…

அன்பிற்கினிய அன்பு,
தங்கள் இடுகையைப் பார்த்தேன். எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியராகப் பெறின் என்ற குறளை மெய்ப்பிக்கும் வகையில் மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறீர்கள். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
ச.வீரமணி

கருத்துரையிடுக