செவ்வாய், 27 அக்டோபர், 2009

மர்மக்காய்ச்சல்களில் மர்மம் உள்ளதா?

டாக்டர் ச. அன்பழகன்
இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக அன்றாடம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இத்தகைய காய்ச்சல்கள் சிக்குன்குனியாவை ஒத்திருப்பதாக மக்களில் சிலரும் சிக்குன்குனியாவே திரும்பவும் வந்துவிட்டதாக வேறு சிலரும் கருதுகின்றனர். தமிழக அரசோ சில இடங்களில் சிக்குன்குனியா உள்ளதாக ஒப்புக்கொண்டும் பல இடங்களில் இது சிக்குன்குனியா இல்லை வேறு வகையான வைரஸ் காய்ச்சல் என்றும் கூறிவருகின்றது. வைரஸ் காய்ச்சல் சுகாதார சீர்கேட்டினாலும் அதன் மூலம் உருவாகும் கொசுக்களினாலும் பரவுவவதாக அமைச்சரும் அதிகாரிகளும் கூறிவருகின்றனர். மாநிலத்தின் பல பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஒரே கிராமத்தில் ஆயிரக்கணக்கானவர்களை வைரஸ் காய்ச்சல் பாதித்து இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அரசு வைரஸ் காய்ச்சலுக்கான ஒரே தீர்வாக ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நம்பி செயல்படுகிறது. ஆங்கில மருத்துவமோ வைரஸ்களை அடிப்படையாகக் கொண்டு மருத்துவம் செய்கிறது. காய்ச்சலுக்குக் காரணமான வைரஸ் கண்டுபிடிக்கப்படாதவரை இந்தக் காய்ச்சலுக்கு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுவதில்லை. வைரஸ் கண்டுபிடிக்கப்படாதவரை மர்மக்காய்சசலாகவே அது நீடிக்கிறது. வைரஸை கண்டுபிடித்து, காய்ச்சலுக்கு சிக்குன்குனியா, டெங்கு என பெயர் சூட்டுவிழா நடத்தி அதற்கான மருந்துகளையும் கண்டுபிடித்து அதனை நோயாளிகளுக்குக் கொடுத்தாலும் நோய் என்னவோ நிரந்தரமாக குணமாவதில்லை. காய்ச்சலுக்கான மருத்துவம் என்பது ஆங்கில மருத்துவத்தைப் பொருத்தமட்டில் உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கான முயற்சியாகவும் வலிக்கொல்லிகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதாகவுமே உள்ளது. கடந்த பருவகாலத்தில் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு ஆங்கில மருத்துவத்தில் சிசிச்சை பெற்றவர்கள் பலர் இந்த பருவகாலம் வரை கை, கால் மூட்டுகளில் வலியுடன் அவதிப்பட்டுவருகின்றனர்.
நோய் கண்டறிவதில் ஆங்கில மருத்துவத்துக்கும் மாற்று மருத்துவங்களுக்கும் வேறுபாடு உள்ளது. ஆங்கில மருத்துவம் ஆய்வக சோதனைகளையும் வைரஸ்களையும் அடிப்படையாகக் கொண்டு நோயைக் கண்டறிகிறது. சித்தா, ஆயர்வேதம், யுனானி போன்ற மருத்துவங்கள் நாடிப்பரிசோதனையைக்கொண்டு நோயைக் கண்டறிகின்றன. ஹோமியோபதியிலோ காய்ச்சலுக்கான பெயர் அவசியமில்லை. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் உடல், மனக்குறிகளைக் கொண்டும் தனித்துவக்கோட்பாட்டின் அடிப்படையிலும் மருந்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்படுகின்றன. ஹோமியோபதியின் பார்வையில் இன்று பரவலாக காணப்படும் மர்மக்காய்ச்சகளில் எந்த மர்மமும் இருப்பதாக தெரியவில்லை. ஹோமியோ மருத்துவம் செய்வதற்குத் தெவையான குறி, குணங்களை தௌளத்தெளிவாக வெளிப்படுத்துவதாகவே இந்த மர்ம(?)க்காய்ச்சல்கள் உள்ளன. உதாரணமாக தலைவலி, குமட்டல், வாந்தி இவைகளின் தன்மைகளைக்கொண்டும், வலியானது சிறிய மூட்டுகளில் உள்ளனவா, பெரிய மூட்டுகளில் உள்ளனவா, நீண்ட எலும்புகளில் உள்ளனவா, தசைகளில் வலி உள்ளனவா எந்த நிலைகளில் வலிகள் கூடுகின்றன அல்லது குறைகின்றன, பசி செரிமானம், தாகம் ஆகியவை எவ்வாறு உள்ளன என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு அதற்கான சரியான மருந்தினைத் தேர்ந்தெடுத்து கொடுப்பதன் மூலம் காய்ச்சலையும் பிற துன்பங்களையும் விரைவாகவும் மென்மையாகவும் நிரந்தரமாகவும் ஹோமியோபதி மருத்துவத்தினால் நலமாக்கமுடியும். ஆகவே மாற்று மருத்துவங்களைக் கொண்டு - குறிப்பாக - உயரிய ஹோமியோபதி மருத்துவத்தைக் கொண்டு வைரஸ் காய்ச்சல்களை வெல்வதற்கு அரசும், பொதுமக்களும் முன்வரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக